Coimbatore

Mutton vadachatti Soru – Puliakulam road, Coimbatore

Coimbatore

இடம்: க்ரேவி ஒய் கேரமெல், புலியகுளம் சாலை, கோவை.

போன்: 86441 41516

நேரம்: முற்பகல் 11:00 – இரவு 11:00 மணி

‘என்ன சாப்பிடுறாங்க?’ என, பக்கத்து மேசையை ஓரக்கண்ணால் நான் மோப்பம் பிடித்துக் கொண்டிருக்க, என் பார்வையில், ‘க்ரன்சி ப்ரைடு சிக்கன்’ சிக்கியது. என் துப்பறியும் பார்வையை புரிந்து கொண்ட ஓட்டுனர், ‘சார், அது மேல்நாட்டு உணவு; நட்சத்திர உணவகங்கள்ல ரொம்ப பிரபலம்!’ எனும் தகவலைத் தந்தார். கண நேரத்தில், நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மட்டன் வடச்சட்டி சோறு, ஆவி பறக்க என் முன் வந்தது; ருசியில் நான் மூழ்கத் துவங்கினேன்!

மட்டன் வடச்சட்டி சோறு: ஒரு கடாயில் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் சுக்கா மசாலா, நல்லெண்ணெய், சின்ன வெங்காயம் மற்றும் வெள்ளாட்டுக்
கறி போட்டு கிளறி, வடித்து வைத்திருக்கும் பாஸ்மதி சோற்றை அதில் கலந்து பிரட்டி எடுத்தால், அதுவே மட்டன் வடச்சட்டி சோறு!

ருசியின் ரகசியம்: ‘இளம் வெள்ளாட்டோட எலும்பில்லா நெஞ்சுக்கறியை சமையலுக்கு பயன்படுத்துறோம்; ருசிக்காக ரசாயன சுவையூட்டிகள்,
நிறமூட்டிகள் எதையும் கலக்கிறது கிடையாது!’ என்கிறார் கடையின் மேலாளர் ஜீவா!

என்ன விலை?: சிறிய மண்சட்டியை முழுமையாய் நிறைத்திருக்கும் மட்டன் வடச்சட்டி சோறு – 210 ரூபாய்!

சோத்துமூட்டை: குழம்பு சட்டிக்குள்ளே சோத்தைப் போட்டு பிசைஞ்சு, அதை உருட்டி என் பாட்டி தந்தது தான், வடச்சட்டி சோத்தை சாப்பிடும் போது, எனக்கு ஞாபகத்துல வந்துச்சு. இந்த சோறு கூட, மட்டன் குழம்பையும், வெங்காய பச்சடியையும் ஊத்தி பிசைஞ்சு சாப்பிட்டப்போ கிடைச்ச ருசி இருக்கே, அதுக்கு ஈடு இணையே கிடையாது. நல்ல இளம் ஆட்டுக்கறியா இருக்கிறதால, மென்னு சாப்பிடுறப்போ அப்படியொரு இதம். அடுத்ததா க்ரன்சி ப்ரைடு சிக்கன்; அடேங்கப்பா… மொறுமொறுன்னு, காரமும் இனிப்பும் கலந்திருந்த அந்த சிக்கன் துண்டுகளை, ‘டார்டாரிக் சாஸ்’ல தொட்டு சாப்பிடுறப்போ, ப்ப்ப்ச்ச்…சொர்க்கம்யா! இதையெல்லாம் சாப்பிட்ட பிறகும், வயித்துல கொஞ்சூண்டு இடம் இருந்ததால, சிக்கன் வடச்சட்டி சோத்தை கொண்டு வரச் சொன்னேன். பாவம்… ஓட்டுனர் தம்பி தான் மிரண்டுட்டாப்ல!

Thanks to Dinamalar : http://www.dinamalar.com/news_detail.asp?id=1576966