9507_224191854425349_1989407038_n

Sukku malli coffee – Keelakarai road

இப்போது மாறிப் போன பாரம்பரியங்களின் மத்தியில், பல இடங்களில் சுக்கு மல்லி காபியெல்லாம் மறைந்தே போய் விட்டது. இதனை இன்றும் ஞாபகப் படுத்தும் விதத்தில் கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில், மின்வாரிய அலுவலகம் அருகாமையில் கமகமக்கும் வாசனையுடன், சூடான ‘சுக்கு மல்லி காபி’ விற்பனை எந்நேரமும் களை கட்டி வருகிறது. இதனை சண்முகவேலு, இராசம்மாள் என்ற வயது முதிர்ந்த தம்பதி நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து 70 வயதை தொட்டாலும் எந்நேரமும் சுறுசுறுப்போடு வேலை செய்து கொண்டிருக்கும் திரு. சண்முகவேலு தாத்தா அவர்கள் கூறும் போது “45 ஆண்டு காலமாக கீழக்கரை செக்கடி பகுதியில் உள்ள ‘செட்டியார் காபித்தூள்’ கடையில் விற்பனையாளராக வேலை செய்தேன். 1988 ஆம் ஆண்டு முதல் தனியாக இந்த இடத்தில் கடை திறந்து பருத்திப் பால் விற்பனையை துவக்கினேன். பிறகு 1998 ஆம் ஆண்டு முதல் சுக்கு மல்லி காபி வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு துணையாக, காபி தயாரிக்கும் எல்லா வேலைகளிலும் என் மனைவி இராசம்மாள் அவர்களும் உதவியாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் மிக சொற்பமானவர்களே எங்கள் சுக்கு காபியை அருந்தி சென்றனர். பின்னர் மெல்ல மெல்ல, இதன் சுவையில் சொக்கி போன வாடிக்கையாளர்கள் தினமும், வந்து அருந்தி மகிழ்வுடன் செல்கின்றனர்.
நாங்கள் விற்பனை செய்யும் இந்த சுக்கு மல்லி காபியின் அலாதியான சுவைக்கு இயற்கையான முறையிலும், சுத்தமான வகையிலும் தயாரிக்கும் விதம் தான் காரணம். காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் இதனை அருந்தலாம். டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல்கள் இதில் இல்லை.குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல்,சளி,ஆஸ்துமா,சர்க்கரை,சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும். அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும். அனைத்து காலங்களுக்கும், எல்லா வயதினருக்கும் ஏற்றது. வந்து ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இது குறித்து ‘சுக்கு மல்லி காபி’ பிரியர், தம்பி நெய்னா பிள்ளை தெருவைச் சேர்ந்த ஜமாலுதீன் அவர்கள் கூறும் போது “நான் எப்போது இராமநாதபுரம் செல்ல பயணித்தாலும், தாத்தா கடையில் சுக்கு மல்லி காபி குடிக்காமல் செல்வதே கிடையாது. கீழக்கரை ஸ்பெசல் லிஸ்டில் தொதல், பணியம், மாசி ஊறுகாய் வரிசையில் இந்த சுக்கு காப்பியும் சேர்ந்துள்ளது. கீழ்க்கரைக்கு புதிதாக வரும் என் நண்பர்களை இங்கு அழைத்து செல்லாமல் இருப்பது இல்லை. இங்கு சுக்கு காபியை தொடர்ந்து அருந்துவதால், நாள் முழுதும் சோம்பல் இல்லாமல், புத்துணர்வோடு இருக்கிறது.மேலும் அதிகபடியான் பித்தம் குறைவதோடு ஜீரணத்தைத் தூண்டி, பசியை அதிகரிக்கிறது” என்று சுக்கு காபியை சுவைத்தவாறு புத்துணர்வோடு தெரிவித்தார்.
இது குறித்து மற்றுமொரு ‘சுக்கு மல்லி காபி’ பிரியர், தட்டார் தெருவைச் சேர்ந்த செல்வக் குமார் அவர்கள் கூறும் போது “நான் இராமநாதபுரம் இந்தியன் வங்கியில் தங்க நகை மதிப்பீட்டளராக வேலை செய்கிறேன். தினமும் இந்த சாலை வழியாகத் தான் பைக்கில் வேலைக்கு செல்கிறேன்.கடந்த பல ஆண்டுகளாக வேலைக்கு செல்லும் போதும், வேலை முடிந்து ஊருக்கு திரும்பும் போதும் தாத்தா கடையில் சுக்கு மல்லி காபி அருந்தி விட்டு செல்வது தான் வழக்கம். இந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை. இதன் தனிச் சுவை என்னை கட்டிப் போட்டு விட்டது. தாத்தாவிடம் காபி செய் முறையை கேட்டுத் தெரிந்து கொண்டு வீட்டிலும் செய்து பார்த்தேன். ஆனால் இங்கு குடிக்கும் போது கிடைக்கும் சுவையை வீட்டில் தயாரிக்கும் போது பெற முடிய வில்லை.”என்று புகழாரம் சூட்டிளனார்.

Address : On the way from Keelakarai to Ramanathapuram road, near to the Electricity board office
Famous for Sukku Malli coffee

9507_224191854425349_1989407038_n

1425656_224191757758692_500885820_n

1463970_224191824425352_1398497139_n

1489276_224191724425362_1591119548_n